Cryptocurrency

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? Cryptocurrency Meaning in Tamil

தற்போது கிரிப்டோ கரன்சி என்ற வார்த்தையை அதிகமாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகம் முழுவதிலும் பல கோடி பேர் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்தியாவிலும் பலபேர் கோடிக்கணக்கான ருபாய் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

இந்த Cryptocurrency என்றால் என்ன? இது எப்படி செயல்படுகிறது, இதில் எவ்வாறு முதலீடு செய்கிறார்கள் போன்ற பல்வேறு கேள்விகள் உங்களின் மனதில் எழலாம். அதை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் அலசலாம்.

Cryptocurrency Meaning in Tamil 

Cryptocurrency Digital Money

Cryptocurrency யை சுருக்கமாக பின்வருமாறு சொல்லலாம்.

  • கிரிப்டோ நாணயம் 
  • டிஜிட்டல் நாணயம்
  • தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நாணயம்
  • மெய்நிகர் பணம்
  • பாதுகாப்பு குறியாக்கம் செய்யப்பட்ட பணம் 

What is Cryptocurrency? | கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

Cryptocurrency - Bitcoin

கிரிப்டோ கரன்சி என்பது உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு டிஜிட்டல் கரன்சி அல்லது மெய்நிகர் கரன்சியாகும் (Virtual Currency). இந்த கரன்சிகள் க்ரிப்டோகிராபி (Cryptography) மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

பொதுவாக நாம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கும்போது, அதற்க்கான பணத்தை நம் கையில் இருக்கும் ருபாய் நோட்டுகளாக கொடுப்போம். கிரிப்டோ கரன்சிகளும் அதே போல தான், கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி ஒரு பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். ஆனால் அவை தொட்டு பார்க்க முடியாத டிஜிட்டல் வடிவில் கரன்சிகளாக இருக்கும்.

ஒரு நாட்டின் கரன்சியானது அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். ஆனால் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் உலகம் முழுவதும் செல்லத்தக்கது ஆகும்.

ஒவ்வொரு நாட்டின் பணத்தையும் அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது. ஆனால் கிரிப்டோ கரன்சியை எந்த ஒரு வங்கியோ, நாடோ கட்டுப்படுத்த முடியாது. 

ஒரு இணைய இணைப்பு இருந்தாலே கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கிரிப்டோ கரன்சிகள் மைனிங் (Mining) என்ற முறையில் செய்யப்படுகின்றன.  

2009 ஆம் ஆண்டு தான் முதல் கிரிப்டோ கரன்சியான பிட்காயின் (Bitcoin) உருவாக்கப்பட்டது. பிறகு எத்திரியம் (Ethereum), பினான்ஸ் (Binance), லைட் காயின் (LiteCoin), டாக் காயின் (DogeCoin), FTX Token போன்ற ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் வந்தன. இன்றைய நாளில் 10,000 க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.

மைனிங் (Mining) என்றால் என்ன?

Bitcoin Mining Process

பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகள் உருவாக்குதல் மற்றும் அவற்றின் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் முறை மைனிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த மைனிங் செயலை செய்யும் நபர்கள் மைனர்கள் ஆவர்.

அனைத்து கிரிப்டோ கரன்சிகளின் பரிவர்த்தனைகளையும் மெய்நிகர் லெட்ஜர்களான (Virtual Ledgers) பிளாக்செயின்களில் (Blockchains) பதிவு செய்யப்படுகிறது. அந்த பிளாக்செயின்களை சரிபார்த்து பாதுகாக்கும் உலகெங்கிலும் உள்ள கணினிகளின் பரவலாக்கப்பட்ட  நெட்வர்க்குகளை இது உள்ளடக்குகிறது.

இதை இன்னும் எளிதாக விளக்குகிறேன்.

நீங்கள் உங்களின் நண்பருக்கு 2 பிட்காயின்களை அனுப்புவதாக கொள்வோம். நீங்கள் அனுப்பிய பிட்காயின்களில், சிறிது பரிவர்த்தனை கட்டணம் போக மீதி பிட்காயின்கள் உங்களின் நண்பருக்கு சென்றுவிடும்.

சிறிது பரிவர்த்தனை கட்டணமாக பிடிக்கப்பட்ட பிட்காயின் ஆனது, உங்களின் பரிவர்த்தனையை நிறைவு செய்த மைனர்களுக்கு சென்றுவிடும். இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை நிறைவு செய்யும் செயலே மைனிங் ஆகும். 

இதுபோல் அனைத்து கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளையும் உலகளாவிய மைனர்களால் நிறைவு செய்யப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு பரிவர்த்தனை கட்டணமானது வெகுமதியாக சென்றுவிடும்.

கிரிப்டோ கரன்சிகளை எவ்வாறு சேமிப்பது?

Cryptocurrency Wallet

பொதுவாக நாம் யாருக்காவது பணத்தை அனுப்ப வேண்டுமென்றால், அவர்களுக்கு ஒரு வங்கிக்கணக்கு எண் இருக்கும். அந்த வங்கிக்கணக்கு எண்ணை கொண்டு பணத்தை அனுப்புவோம். அதே போன்று நாம் பணத்தை பெறுவதற்கு நமக்கும் ஒரு வங்கிக்கணக்கு எண் இருக்கும். வங்கிகள் வழங்கும் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் நாம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம்.

அதே போன்று கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க மற்றும் பரிவர்த்தனைகளை செய்ய கிரிப்டோ வாலட்கள் (Crypto Wallets) தேவைப்படுகின்றன. ஒவ்வொரு வாலட்டுக்கும் ஒரு தனித்துவ வாலட் முகவரி (Wallet Address) இருக்கும். இந்த Crypto Wallet Address மூலம் கிரிப்டோ கரன்சிகளை அனுப்பவும், பெறவும் முடியும்.

ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் ஒரு தனி கிரிப்டோ வாலட் தேவைப்படும். உதாரணமாக, பிட்காயின்களை பெறுவதற்கும், அனுப்புவதற்கும் பிட்காயின் வாலட்டும், எத்திரியம் காயின்களை பெறுவதற்கு, அனுப்புவதற்கும் எத்திரியம் வாலட்டும் தேவைப்படும்.

நமது வங்கிக்கணக்கு எண்களை நினைவில் கொள்வது மிகவும் எளிது. ஏனெனில் அவை சில எண்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் கிரிப்டோ வாலட்களை நினைவில் கொள்வது மிகவும் கடினம் ஆகும். கிரிப்டோ வாலட்கள் 14 முதல் 74 எழுத்துக்களை கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, BTC இன் Wallet Address 3FZugi29cpjq2kjdwV4eyHuJJokLtktZc5 என்று இருக்கும்.

கிரிப்டோ கரன்சிகளில் எவ்வாறு முதலீடு செய்வது?

தனிநபர்கள் கிரிப்டோ கரன்சியை வாங்கவும், விற்கவும் செய்யலாம். நீங்கள் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், அதற்க்கு உங்களின் இந்திய ரூபாய் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்ற வேண்டும்.

இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில Cryptocurrency Exchange நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் இந்திய ரூபாய் பணத்தை கொடுத்து தேவையான கிரிப்டோ கரன்சிகளை வாங்கிக்கொள்ளலாம். 

எடுத்துக்காட்டாக, UnoCoin, Binance, Zebpay ஆகிய நிறுவனங்கள் இந்திய ரூபாய்களை பெற்றுக்கொண்டு கிரிப்டோ கரன்சிகளை வழங்குகின்றன. 

அதற்க்கு முன்பு உங்களை பற்றிய விவரங்களை அந்த நிறுவனங்கள் வாங்கிக்கொள்ளும். விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களின் இணையதளத்தில் ஒரு கணக்கை திறக்க வேண்டும். அந்த கணக்கில் கிரிப்டோ கரன்சிகளின் வாலட்கள் இருக்கும். அதன் மூலம் கிரிப்டோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் கிரிப்டோ கரன்சிகளின் விலை ஏற்றங்கள், இறக்கங்களை கொண்டு Trading செய்யலாம். 

Cryptocurrency இன் நிறைகள் 

  • கிரிப்டோ கரன்சியானது உலகம் முழுவதும் பயன்படுகிறது. எனவே நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டின் கரன்சியை தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கிரிப்டோ கரன்சி மூலமாகவே உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம்.
  •  கிரிப்டோ கரன்சிகளில் உலகில் எந்த நாடும் தலையிட முடியாது. எனவே கிரிப்டோ கரன்சிகளை எந்த நாடும் கட்டுப்படுத்தவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ இயலாது.
  • கிரிப்டோ கரன்சிகள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் இதை ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் ஆகும்.
  •  கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையின் கட்டணம் மிக குறைவாகும். பரிவர்த்தனையை சரிபார்க்க VISA, Master Card போன்ற மூன்றாம் தரப்பினரின் தேவையை நீக்குவதின் மூலம் இது சாத்தியமாகிறது. எனவே குறைந்தபட்ச கட்டணங்களின் மூலம் கிரிப்டோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
  • கிரிப்டோ கரன்சி வாலட்கள் மற்றும் பரிவர்த்தனைகளை யாராலும் கண்காணிக்க முடியாது. மேலும் பரிவர்த்தனையை செய்யும் போது பயனரின் வாலட் முகவரி இருந்தால் போதுமானது, அவரின் பெயர் குறிப்பிட தேவையில்லை. எனவே பயனரின் சுய விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

Cryptocurrency இன் குறைகள் 

  • இதன் பரிவர்த்தனைகளை அரசாங்கத்தால் கூட கண்காணிக்க முடியாது என்பதால், சட்டவிரோத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
  • யார் வேண்டுமானாலும் பிளாக்செயின் அடிப்படையில் கிரிப்டோ கரன்சிகளை உருவாக்கலாம். இதனால் எந்த காயின் எதன் அடிப்படையில் இயங்குகிறது மற்றும் இது உண்மையான காயினா என்று அறிவதற்கு எந்த விதிமுறைகளும் இல்லையென்பதால், இதன் நம்பகத்தன்மை குறைகிறது.
  • ஒருவேளை நீங்கள் கிரிப்டோ வாலட்டின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதில் உள்ள கிரிப்டோ கரன்சியை மீட்க முடியாது.
  • இந்த கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில் ஏற்ற, இறக்கத்தில் எந்த அடிப்படையும் இல்லை. தேவையை பொறுத்தே ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
  • நீங்கள் நிதியை அனுப்பியவரிடம் தகராறு ஏற்பட்டாலோ அல்லது தவறான பணப்பைக்கு அனுப்பினாலோ அந்த பணத்தை திரும்ப பெற முடியாது.

FAQ – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 

1. கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
Cryptocurrency என்பது உலகெங்கும் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணயமாகும். இது பாதுகாப்புக்காக கிரிப்டோகிராஃபியைப் பயன்படுத்துகிறது.

2. கிரிப்டோகரன்சி எப்படி வேலை செய்கிறது?
கிரிப்டோகரன்சிகள் ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்துகின்றன. அதாவது அவை எந்த அரசு அல்லது நிதி நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. உலகெங்கிலும் உள்ள கணினிகளின் வலையமைப்பால் பராமரிக்கப்படும் பிளாக்செயின் எனப்படும் பொதுப் பேரேடு மூலம் பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.

3. பிளாக்செயின் என்றால் என்ன?
பிளாக்செயின் என்பது உலகெங்கிலும் உள்ள கணினிகளின் நெட்வொர்க் மூலம் சரிபார்க்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் லெட்ஜர் ஆகும். சங்கிலியில் உள்ள ஒவ்வொரு தொகுதியும் முந்தைய தொகுதியின் கிரிப்டோகிராஃபிக் ஹாஷ் மற்றும் நேரமுத்திரை மற்றும் பரிவர்த்தனை தரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

4. பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் முதல் மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சி ஆகும். இது சடோஷி நகமோட்டோ என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி ஒரு அநாமதேய நபர் அல்லது குழுவால் 2009 இல் உருவாக்கப்பட்டது.

5. கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?
கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மூலமாகவோ அல்லது பியர்-டு-பியர் பரிவர்த்தனைகள் மூலமாகவோ நீங்கள் கிரிப்டோகரன்சியை வாங்கலாம். உங்கள் கிரிப்டோகரன்சியைச் சேமிக்க, நீங்கள் பொதுவாக டிஜிட்டல் வாலட்டை அமைக்க வேண்டும்.

6. கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா?
பெரும்பாலான நாடுகளில் Cryptocurrency சட்டவிரோதமானது அல்ல. ஆனால் சில அரசாங்கங்கள் அதன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் அல்லது தடைகளை விதித்துள்ளன.

7. கிரிப்டோகரன்சியுடன் தொடர்புடைய அபாயங்கள் என்ன?
க்ரிப்டோகரன்சி என்பது மிகவும் கொந்தளிப்பான சொத்து ஆகும். அதாவது அதன் மதிப்பு வேகமாக ஏற்ற இறக்கமாக இருக்கும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மாற்ற முடியாதவை. அதாவது நீங்கள் தவறு செய்தால் அல்லது மோசடிக்கு பலியாகினால், உங்கள் நிதியை உங்களால் மீட்டெடுக்க முடியாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole