Periods Meaning in Tamil | மாதவிடாய் என்றால் என்ன?
Menstruation அல்லது Periods என்று அழைக்கப்படும் மாதவிடாயை பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது அவசியமாகும். பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இதை பற்றி தெரிந்துகொள்வது அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள உதவும்.
உங்களுக்கு மாதவிடாய் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழலாம். அவற்றையெல்லாம் தெளிவுபடுத்தும் நோக்கில் மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன?, அது எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் மாதவிடாய் நிகழும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Periods Meaning in Tamil | மாதவிடாய் என்றால் என்ன?
Periods அல்லது மாதவிடாய் என்பது பெண்களின் கருப்பையில் இருந்து, திசுக்களுடன் கூடிய இரத்தம் வெளியேறும் ஒரு இயற்கையான உடலியல் செயல்முறை ஆகும். இந்த உடலியல் செயல்முறையானது, ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இந்த சுழற்சியானது மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக இந்த மாதவிடாய் ஆனது பெண்களின் டீன் ஏஜ் பருவத்தில் தொடங்குகிறது. முதல்முறையாக நடக்கும் மாதவிடாய் நிகழ்வு பூப்படைதல் என்று அழைக்கப்படுகிறது. இது 12 அல்லது 13 வயதில் தொடங்கி 40 முதல் 50 வயதில் நிறுத்தப்படுகிறது.
மாதவிடாய் ஆனது மற்ற சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதாவது Periods, Menstruation, Menstrual, உதிரப்போக்கு, இரத்தப்போக்கு போன்ற பெயர்களாலும் சொல்லப்படுகிறது.
மாதவிடாய் எவ்வாறு நிகழ்கிறது?
ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் நிகழும் மாதவிடாய் ஆனது, முழுக்க முழுக்க ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு பெண் பூப்படைந்த பிறகு, அந்த பெண்ணின் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்ற பகுதியானது, அதற்க்கு கீழே உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டும். அந்த பிட்யூட்டரி சுரப்பியானது இரத்தத்தில் ஒருவகையான ஹார்மோனை வெளியிடும்.
இந்த ஹார்மோன் ஆனது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு பகுதியில் இருக்கும் அண்டகத்தை தூண்டும். அண்டகங்களில் ஏற்கனவே இருக்கும் பல்லாயிரக்கணக்கான கருமுட்டை செல்களில் ஒன்று மட்டும் வளர்ச்சியடைந்து ஒரு முழு கருமுட்டையாக மாறும். அதே நேரத்தில் அண்டகங்களானது Estrogen, Progesterone என்ற இனப்பெருக்க ஹோர்மோன்களையும் உற்பத்தி செய்யும்.
இந்த Estrogen, Progesterone என்ற இனப்பெருக்க ஹோர்மோன்களானது, கருப்பையின் உட்சுவரான எண்டோமெட்ரியாவில் மாற்றங்களை ஏற்படும். அதாவது கருப்பையில் ஒரு கரு வளர்வதற்கு ஏற்றவாறு திசுக்களை கொண்டு ஒரு சிறப்பு இடத்தை தயார் செய்து வைக்கும்.
கருமுட்டையானது Ampulla என்ற பகுதியில் விந்தணுவின் (Sperm) வருகைக்காக 2 நாட்கள் வரை காத்திருக்கும். விந்தணு வந்தவுடன் கருமுட்டையும் விந்தணுவும் இணைந்து கருத்தரித்தல் (Fertilisation) நடைபெறும். பிறகு அந்த கருவானது எண்டோமெட்ரியா என்ற உட்சுவரில் பதிந்து குழந்தை வளர ஆரம்பிக்கும்.
ஒருவேளை 2 நாட்கள் வரை விந்தணு வரவில்லையென்றால் கருத்தரித்தல் நிகழாது. இதனால் கருப்பையில் ஏற்கனவே திசுக்களால் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சிறப்பு இடம் தற்போது தேவைப்படாது. எனவே இறந்த கருமுட்டை, கருப்பையின் உட்புற சுவரில் உள்ள திசுக்கள் மற்றும் இரத்தம் இவை அனைத்தும் சிறிது சிறிதாக வெளியற ஆரம்பிக்கும்.
இது 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வெளியேறும். இந்த செயல்முறை தான் மாதவிடாய் ஆகும். இந்த செயல்முறை ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒருமுறையும் நிகழும்.
Periods இன் போது ஏற்படும் பிரச்சனைகள்
பொதுவாக மாதவிடாயின் போது பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு அடைகிறார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் சில பொதுவான அனுபவங்கள் இங்கே:
- கடுமையான வயிற்று வலி
- உடல்சோர்வு
- நீர் தேக்கம் மற்றும் வீக்கம்
- மனநிலை மாற்றங்கள்
- தலைவலி
- உணவுப் பசி
- உணர்ச்சி மாற்றங்கள்
இந்த அனுபவங்களின் அளவும் தீவிரமும் நபருக்கு நபர் பரவலாக மாறுபடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியின் இயல்பான பகுதியாக இருந்தாலும், தினசரி வாழ்க்கை அல்லது நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் தலையிடும் எந்த அறிகுறிகளும் ஒரு சுகாதார வழங்குநரிடம் விவாதிக்கப்பட வேண்டும்.
மாதவிடாயின் போது சுய கவனிப்பு நடைமுறைகள்
மாதவிடாய் நேரத்தின் போது சில சுய கவனிப்பு முறைகளை பின்பற்றலாம்.
- இப்யூபுரூஃபன் அல்லது நாப்ராக்ஸன் போன்ற ஓவர்-தி-கவுன்டர் வலி நிவாரணிகள் மாதவிடாய் பிடிப்பை போக்க உதவும்.
- சீரான இடைவெளியில் அவ்வப்போது தண்ணீரை குடியுங்கள்.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமநிலையான உணவை உட்கொள்ளுங்கள்.
- மனஅழுத்தத்தை நிர்வகிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் வழக்கமாக செய்யும் உடல் வேலைகளை செய்யுங்கள்.
- ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
- போதுமான அளவு நன்றாக தூங்குங்கள்
- காலண்டர்களை பயன்படுத்தி உங்களின் மாதவிடாய் சுழற்சிகளை கண்காணிக்கவும். இது முன்பே திட்டமிடலுக்கும் உதவும்.