Stress என்றால் என்ன? | Stress Meaning in Tamil
Stress அல்லது மன அழுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வி, தற்போது வயது வித்தியாசம் இன்றி பெரும்பாலானவர்களிடம் எழும் கேள்வியாக உள்ளது. ஏனெனில் நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கைமுறை பரபரப்பான ஒன்றாக மாறிவிட்டது.
ஒவ்வொரு நாளும் பல காரணிகளால் Stress என்று சொல்லப்படும் மன அழுத்தம் ஏற்படுகிறது. வேலை பளு, நேரமின்மை, நம்முடைய தேவைகள் மற்றும் நிதி பற்றாகுறை போன்ற பல்வேறு காரணிகள் இதில் அடங்கும்.
Stress ஏற்படுவதால் பல பாதிப்புகள் இருந்தாலும், குறிப்பிட்ட அளவு மன அழுத்தம், நமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் காண உதவுகிறது. ஆனால் அதிகமான மன அழுத்தமானது, நமது மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் கேடு விளைவிக்கும்.
இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை பற்றிய பல விடயங்களை ஆராய்வோம்.
Table of Contents
Stress என்றால் என்ன? | Stress Meaning in Tamil
மன அழுத்தம் (Stress) என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் அல்லது சவால்களை எதிர்க்கொள்ள முடியாமல் போகும்போது, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களே ஆகும். தனிநபர்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது, அவர்களின் உடலில் இயற்கையாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடப்படுகின்றன.
ஒரு பிரச்சனையால் தோன்றும் மன அழுத்தமானது, நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக, தேர்வில் தோல்வி அடையும்போது ஏற்படும் மன அழுத்தமானது, திட்டங்களை தீட்டுதல், கடுமையாக படித்தல், ஏற்கனவே செய்த தவறுகளை தவிர்த்தல் போன்ற பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.
இருந்தாலும், அதிகமான மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தங்கள், நமது உடலுக்கும் மனதிற்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? | Why Does Stress Occur?
மன அழுத்தம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். அதாவது ஒரு நபருக்கு மன அழுத்தத்தை ஏற்படும் காரணியானது, மற்றொரு நபருக்கு மன அழுத்தத்தை ஏற்படாமல் இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு நபர் வங்கியில் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப தெரியாதவராக இருந்தால், அவர் அதை எப்படி நிரப்புவது, யாரிடம் உதவி கேட்பது என்று சிந்தித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம்.
ஒருவேளை வங்கியை பற்றி நன்கு அறிந்த மற்றொரு நபர், அந்த பணம் எடுக்கும் படிவத்தை விரைவாக நிரப்பி பணத்தை எடுத்துவிடுவார். இதனால் அவருக்கு எந்த மன அழுத்தமும் ஏற்படாது. இதிலிருந்து ஒரு சூழலால் அல்லது சவாலால் ஏற்படும் மன அழுத்தமானது, ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக செயல்படலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
ஒருவருக்கு பல்வேறு காரணிகளால் மன அழுத்தம் உருவாகலாம். அவற்றில் சில பொதுவாக காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- அதிகமான வேலைப்பளு
- குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனை
- காதல் தோல்வி
- நிதி பற்றாக்குறை
- இழப்புகள்
- போதுமான நேரம் இல்லாமை
- வாழ்க்கை முறை
- உடல் நலப்பிரச்சனை
- வேலையின்மை
- எப்பொழுதும் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தல்
இவ்வாறான பல காரணிகள் Stress யை ஏற்படுத்துகிறது. இன்னும் சில நபர்களுக்கு சொற்ப காரணங்களால் கூட மன அழுத்தம் ஏற்படலாம். இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?
மன அழுத்தம் ஏற்படும் போது உடல், உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் நடத்தை போன்ற பல்வேறு அறிகுறிகளால் வெளிப்படும். மன அழுத்தத்தின் சில பொதுவான அறிகுறிகள் இங்கே:
உடல் அறிகுறிகள்:
- தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி
- தசை பதற்றம் அல்லது விறைப்பு
- சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல்
- தூக்கமின்மை
- வயிற்று வலி, குமட்டல் அல்லது பசியின்மை போன்ற செரிமான பிரச்சனைகள்
- அதிகரித்த இதய துடிப்பு மற்றும் படபடப்பு
- வியர்வை மற்றும் ஈரமான கைகள்
- பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி
உணர்ச்சி அறிகுறிகள்:
- எரிச்சல்
- கவலை அல்லது பதட்டம் போன்ற உணர்வுகள்
- அமைதியின்மை
- மனச்சோர்வு
- கோபம்
- விரக்தி
- செயல்பாடுகளில் ஆர்வம் இழப்பு
- அதிகரித்த உணர்ச்சி
அறிவாற்றல் அறிகுறிகள்:
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- ஞாபக மறதி
- மோசமான முடிவெடுத்தல்
- மன தெளிவின்மை
- எதிர்மறை சிந்தனை
- மனது தொடர்ந்து அழுத்தங்களில் மூழ்கிக் கிடப்பது
நடத்தை அறிகுறிகள்:
- சமூக விலகல் அல்லது தனிமைப்படுத்தல்
- ஆல்கஹால், புகையிலை அல்லது போதைப்பொருள் போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல்
- தள்ளிப்போடும் பழக்கம்
- பொறுப்புகளைத் தவிர்த்தல்
- உறவு மோதல்கள் அல்லது மற்றவர்களிடம் எரிச்சல்
- உற்பத்தித்திறன் குறைதல்
இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். மேலும் சில நபர்கள் வெவ்வேறு அறிகுறிகளின் கலவையை அனுபவிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் சிறிய காலத்திற்கு மட்டும் ஏற்பட்டால் அதிக பாதிப்புகள் இருக்காது. ஒருவேளை தொடர்ந்து அறிகுறிகள் இருந்து அது உங்களின் தினசரி வாழ்க்கையையே பாதித்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை கிளிக் செய்து படிக்கலாம்.